மாகாண சபைத் தேர்தலை நடத்தி அரசாங்கம் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்; எஸ்.எம். மரிக்கார் சவால்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

அவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று 21 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த காலப்பகுதிக்குள் நாட்டின் பொருளாதாரம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறைகள், முதலீடுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளன. எவ்வாறாயினும், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் என்றே தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் தொடர்ச்சியாகக் கூறிவந்தது. குறிப்பாக, உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கான வற் (VAT) வரியை நீக்குவதாகக் கூறி, மக்கள் மத்தியில் அரசாங்கம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்ததுடன், கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகவும் விலைகளைக் குறிப்பிட்டுத் தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் (JVP) மக்களின் நம்பிக்கையைப் பெற்றன. ஆனால், தற்போது எரிபொருள் விலையை பெருமளவில் உயர்த்தியுள்ளதுடன், மின்சாரக் கட்டணத்தை 43 சதவீதத்தால் அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வற் வரி நீக்கப்படும் என அரசாங்கம் கூறியதால் பஸ் கட்டணங்கள், மின்சாரக் கட்டணங்கள், உணவு, மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களின் விலைகள் குறையும் என நம்பியே மக்கள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 140 பில்லியன் ரூபாய் லாபமீட்டிய இலங்கை மின்சார சபை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 38 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் தங்களின் மூன்று நேர உணவில் ஒரு நேர உணவைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க பெற்றோர்களால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளைத் தாண்டி, இன்றைய நாளைக் கடத்துவதே மக்களுக்குப் பெரும் போராட்டமாக மாறியுள்ளதுடன், தினசரி வருமானம் ஈட்டவோர் நாளைய தினம் குறித்து எந்தவொரு நம்பிக்கையும் அற்ற நிலையில் உள்ளனர்.

ஒரேடியாக மூன்று முறை மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில், இருட்டில் இருக்க முடியாது என்பதால் மக்கள் தங்களின் உணவுக்காக ஒதுக்கிய பணத்தைக் கொண்டே சிரமத்திற்கு மத்தியில் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு மக்களுக்கு அழிவையே அரசாங்கம் பரிசாக அளித்துள்ளது.
இன்று டொலரின் மதிப்பு சில மாதங்களுக்குள் 50 ரூபாயால் உயர்ந்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாயினால் வீழ்ச்சியடைந்தாலும் இலங்கையின் கடன் சுமை 40 பில்லியனால் அதிகரிக்கும் என்ற நிலையில், கடந்த சில மாதங்களில் ரூபாய் வீழ்ச்சியடைந்தமையால் நாட்டின் கடன் சுமை 2,000 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.

அத்துடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான இடைவெளி மிக வேகமாக அதிகரித்துள்ளது. தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தமையால் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால், அந்த மின்சாரத் தேவையை டீசல் மூலம் உற்பத்தி செய்ய நேரிட்டு, மேலதிகமாக ஒரு டீசல் கப்பலை நாட்டுக்குக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் இறக்குமதிக்கு 1,500 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களுக்குள்ளேயே 1,500 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவில் எரிபொருளை இறக்குமதி செய்ய பெருமளவு டொலர்கள் செலவிடப்பட்டதால் டொலரின் மதிப்பு உயர்ந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இதன் காரணமாக ஏனைய அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இந்தச் செயற்பாடுகளால் இறக்குமதி, ஏற்றுமதித் திறன் குறைந்து, நாட்டின் கையிருப்பு அளவும் வீழ்ச்சியடைந்துள்ளமையானது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களின் வாழ்க்கையை சீரழிவை நோக்கி கொண்டு சென்றுள்ளது என்பதற்குச் சான்றாகும்.
நாட்டில் உள்ள 527 அரச நிறுவனங்களில் 51 நிறுவனங்களின் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனங்கள் 2025 இல் 444 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. 2024 இல் அவற்றின் லாபம் 539 பில்லியனாகவும், 2023 இல் 445 பில்லியனாகவும் இருந்தது. 2025 இல் கிடைத்த 444 பில்லியன் ரூபாய் லாபத்தில் 320 பில்லியன் ரூபாய் நிதித்துறையிலிருந்தே கிடைத்துள்ளது.

ஆனால், கட்டுமானத்துறை போன்ற போட்டித்தன்மை வாய்ந்த சந்தையைக் கொண்ட நிறுவனங்கள் 709 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டுள்ளன. அரசாங்கம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு 23 பில்லியன் ரூபாயை வழங்கிய போதிலும் அது 25 பில்லியன் ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளதுடன், நீர்வழங்கல் சபைக்கு அரசாங்கம் 45 பில்லியன் ரூபாயை வழங்கிய போதிலும் அது 14 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கத்திடம் 16.5 ட்ரில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் உள்ளன என்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 50 சதவீதம் அரச வர்த்தக நிறுவனங்களின் சொத்துக்களாகவே உள்ளன. எனினும், இந்த சொத்துக்களில் இருந்து திறைசேரிக்கு 56.5 பில்லியன் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதுடன், உண்மையில் அந்தப் பணம்கூட சரியாகக் கிடைக்கவில்லை. மாறாக, நட்டமடையும் அரச நிறுவனங்களைப் பராமரிப்பதற்காக அரசாங்கம் 103 பில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. அரச நிறுவனங்களின் உண்மை நிலை இதுதான் என்பதுடன், மக்களின் வாழ்வாதாரம் சீரழிந்து, ரூபாய் வீழ்ச்சியடைந்து, நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இன்றி, இறக்குமதி-ஏற்றுமதி இடைவெளி அதிகரித்துள்ள சூழலில் அரசாங்கம் அரச நிறுவனங்களின் நட்டத்தை மக்கள் மீது சுமத்தியுள்ளது.

கடந்த 2024.10.01 முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் அளவு எவ்வளவு, அவை எந்தெந்தத் திட்டங்களுக்காகக் கொண்டுவரப்பட்டன, அத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் மற்றும் நிறைவடையும் திகதிகள் எவை, அத்தகைய முதலீடுகள் வந்திருந்தால் எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன போன்ற கேள்விகளை நான் பாராளுமன்றத்தில் எழுப்பியிருந்தேன். ஆனால், அரசாங்கம் பதிலளிக்க முடியாமல் கால அவகாசம் கோரியதுடன், இக்கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதில்கள் இல்லை. கொழும்பு பங்குச்சந்தைக்கு வந்த 10 மில்லியனைத் தவிர வேறு எந்தவொரு டொலரும் நாட்டுக்குக் கிடைக்கவில்லை.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டைப் பொறுப்பேற்கும்போது நாட்டின் கடன் சுமை 93 பில்லியனாக இருந்தது, தற்போது அது 107 ஆக அதிகரித்துள்ளதுடன் அரசாங்கம் எதையும் செய்யாமலேயே நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது. நாட்டின் மக்கள் மீண்டும் வெற்று வார்த்தைகளை நம்பி ஏமாந்துள்ள போதிலும், அரசாங்கம் இன்னமும் மக்களை ஏமாற்றி வருகின்றது. இது குறித்து மக்களுக்கு இப்போது ஓரளவுக்குப் புரிதல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் கூறியது போல மக்களின் வாழ்க்கையை வளமாக்கியுள்ளதா என்பதை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது உள்ளது.

எனவே, பொய்ப் பிரசாரங்களைச் செய்யாமல் முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறேன். முடிந்தால் மாகாண சபைத் தேர்தலில் வென்று காட்டுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.