பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி விலகல்: புதிய பாதுகாப்பு அமைச்சராக டான் ஜார்விஸ் நியமனம்
Meiveli Media Team

இராணுவ நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்த ஜான் ஹீலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, டான் ஜார்விஸ் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நியமனம் தொடர்பில் பிரதமர் கியர் ஸ்டாமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானிய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தனது அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எப்போதும் முன்னெடுப்பேன் என குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலை மேலும் சிக்கலானதாகவும் அச்சுறுத்தலானதாகவும் மாறிவருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், பாதுகாப்புத் துறையில் அனுபவம் மிக்க டான் ஜார்விஸை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர், ஐரோப்பிய பாதுகாப்பு சவால்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில்இ பிரித்தானிய ஆயுதப் படைகளின் திறன்களை மேலும் மேம்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அபாயகரமான மற்றும் நிலையற்ற உலக சூழலில், பிரித்தானியாவை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான வளங்கள் மற்றும் ஆதரவை ஆயுதப் படைகளுக்கு வழங்குவோம் என்றும் பிரதமர் ஸ்டாமர் வலியுறுத்தியுள்ளார். புதிய பாதுகாப்பு அமைச்சரின் நியமனம், பிரித்தானியாவின் பாதுகாப்புக் கொள்கைகளில் புதிய மாற்றங்களையும் முன்னுரிமைகளையும் கொண்டு வரும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன

