“உயிர்த்த ஞாயிறு இரத்தக் கறை படிந்த உண்மை மூடிமறைக்கப்படுகிறதா? விசாரணைகள் மீது துமிந்த திஸாநாயக்க கடும் சாடல்!”

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரியையும், அதன் திட்டமிட்டாளர்களையும் கண்டறிவதற்கு முன்பாக, அக்காலத்தில் உயர் பதவிகளில் வகித்த ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மேலும் குறிப்பிடுகையில்,

உளவுத்துறைத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும், இந்தத் கொடூரமான தாக்குதலை அவர்கள் ஏன் தடுக்கவில்லை என்பது குறித்து முறையான விபரங்கள் கண்டறியப்பட வேண்டும் என்றார்.

இந்த விவகாரத்தில், தாக்குதலுக்கு உள்ளான தேவாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடமையாற்றிய கீழ்மட்ட உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, உயர் அதிகாரிகள் வரை உள்ள அனைவரிடமும் அது விரிவாக நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், ஒரு சுயாதீன அதிகாரிகள் குழுவை நியமிப்பதாகவே அரசாங்கம் முதலில் கூறியிருந்த போதிலும், கர்தினால் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கைக்கு இணங்கவே ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் தற்பொழுது கூறி வருவதாகத் தெரிவித்தார்.

எனவே, தற்போதைய உயிர்த்த ஞாயிறு விவகார விசாரணையானது “வழக்கும் சாமி உடையது, பொருளும் சாமி உடையது” என்ற பழமொழிக்கு இணையான ஒரு பாரபட்சமான சூழ்நிலையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது என முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.