அமெரிக்கா–ஈரான் பதற்றம் தொடரும் நிலையில் இலங்கை வந்தடைந்த யுஎஸ்எஸ் கன்பெரா கப்பல்
Meiveli Media Team

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கன்பெராஇ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். இருநாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இடையில் பல்வேறு தொழில்முறை சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. அதேவேளை, கடல்சார் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் முகாமைத்துவம் தொடர்பான அனுபவப் பகிர்வுகளும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுஎஸ்எஸ் கன்பெரா, அமெரிக்க கடற்படையின் நவீன போர்க்கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற நிலையில், இந்தக் கப்பல் முன்பாக மத்திய கிழக்கு மற்றும் அரேபியக் கடல் பகுதிகளில் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பிரிவில் செயற்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த விஜயம், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் மற்றுமொரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா–ஈரான் பதற்றம் தொடரும் நிலையில் யுஎஸ்எஸ் கன்பெரா இலங்கை வந்துள்ள போதிலும், இந்த விஜயம் ஈரான் தொடர்பான நடவடிக்கையுடன் இணைந்தது என எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


