சமுர்த்தியை விற்கவோ அல்லது துண்டுபோடவோ எந்த ஆயத்தமும் இல்லை: அமைச்சர் உபாலி பன்னில தெரிவிப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அனைத்திலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் 29 ஆவது தேசிய மாநாடு இன்று (10) முற்பகல் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் பத்தரமுல்ல, சுஹுருபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகக் குறுகிய காலத்திற்குள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அவற்றில் ஓய்வூதியப் பிரச்சினை, சம்பள மேலதிகக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினை, சம்பளக் குறியீடு தொடர்பான பிரச்சினை மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்தி அவற்றிற்கு தீர்வு காண்பது போன்றன பிரதானமானவை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த அரசாங்கங்களின் காலத்தைப் போன்று சமுர்த்தி ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தவில்லை எனவும், அரச ஊழியருக்குரிய கௌரவம் கிடைக்கும் வகையில் பணியாற்றுவதற்குத் தேவையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் நுண்நிதித்துறையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் பாரிய சேவையாற்றி வருவதால், அதனை எந்த வகையிலும் விற்பனை செய்வதற்கோ அல்லது துண்டாடுவதற்கோ எவ்வித ஆயத்தமும் இல்லை என்றும், அதனை மிகவும் வலுவாகவும் பயனுள்ளதாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், ஊழியர்களின் பதவி உயர்வு நடைமுறைகளை இவ்வருடத்திற்குள் நிறைவு செய்யுமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், அனைத்திலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள், உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.


