“அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன” – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் தன்னிச்சையான சட்ட அமலாக்கங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பானதுறை தொகுதி அமைப்பாளர் நயனக ரங்வெல்ல, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் 86 பகுதிகள் காப்பகங்களாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட அறிவிப்பு உண்மைக்கு புறம்பானது என்று குறிப்பிட்டார்.

தங்களது களஆய்வுகளின்படி 26 பகுதிகள் மாத்திரமே இதுவரை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதி குறிப்பிட்ட காப்பகங்கள் எவை மற்றும் அவற்றின் வர்த்தமானி அறிவித்தல் இலக்கங்கள் என்ன என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்துவது சுற்றுச்சூழல் அமைச்சரினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார். மேலும், யானை வழித்தடங்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளை விடுத்து, ஜனதா விமுக்தி பெரமுனவின் அரசியல் தேவைகளுக்கு ஏற்பவே சில தேவையற்ற பகுதிகள் வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், இதனை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமையினால் நாட்டுக்கு பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து இருவேறு வகையான சாம்பல் வெளியேற்றப்படுவதால் மின் நிலையத்தின் ஆயுட்காலமும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்து நட்டஈடு வசூலிக்கப்படும் என அரசாங்கம் கூறினாலும் அது இதுவரை நடக்கவில்லை எனத் தெரிவித்த அவர், இந்த மோசடி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அரசாங்கம் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகவும், இதற்கு அரசாங்கம் தற்காலிக ஒட்டுவேலைகளையே தீர்வாக முன்வைப்பதாகவும் தெரிவித்த நயனக ரங்வெல்ல, ரூபாயின் மதிப்பை ஸ்திரப்படுத்துவதற்காக மத்திய வங்கி சுமார் 225 மில்லியன் டொலர்களை சந்தைக்கு விடுவித்த போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். சந்தையில் நம்பிக்கை இழப்பு மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மீதான அவநம்பிக்கை காரணமாக பொருளாதாரம் மேலும் நலிவடைந்துள்ள சூழலில், உலகளாவிய யுத்தச் சூழல், சுற்றுலாத்துறை வீழ்ச்சி மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் மேலும் முடக்கப்படலாம் என எச்சரித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே குறித்துப் பேசுகையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான காட்டுமிராண்டிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். எனினும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களை அநாகரிகமான முறையில் சித்திரவதை செய்வதையோ, உடல் ரீதியான ஊனங்களை ஏற்படுத்துவதையோ அல்லது பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்துவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், சட்டம் சட்டத்தின் வழியிலேயே கிரமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், கைதிகளுக்கு எதிரான மனிதநேயமற்ற சித்திரவதைகளை சட்ட அமலாக்கப் பிரிவினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இறுதியாக, உலகெங்கிலும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கைக்கும் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால் நாட்டில் மின்சக்தி மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற பாரிய பிரச்சினைகள் உருவாகலாம் என்பதால், இந்த அவசர நிலையை எதிர்கொள்ளவும் பொதுமக்களையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கவும் அரசாங்கம் உடனடியாக முறையான தேசியக் கொள்கையொன்றை வகுத்துச் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அவர் கேட்டுக்கொண்டார்.