உயிர்த்த ஞாயிறு விசாரணை என்ற பெயரில் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்க வேண்டாம் – தயாசிறி ஜயசேகர சாடல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலாலும் அதன் பின்னரான சூழலாலும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நியாயமான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும், ஆனால் முறையான விசாரணைகளின்றி தன்னிச்சையாக நபர்களைக் கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்; சட்டத்தின்படி செயல்படுங்கள்” என்ற வாசகப் பின்னணியில் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய நகர்வுகள் அரசியல் பழிவாங்கலாகவே பார்க்க முடிகிறது என்றார்.
இத்தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிக்கொண்டு வருவதை விடுத்து, யாரையாவது ஒருவரைக் கைது செய்து, அவரே பிரதான சூத்திரதாரி எனத் தீர்ப்பளிக்கவே சில தரப்பினர் முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சாலேக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தாங்கள் சுரேஷ் சாலே என்ற தனிநபரைப் பற்றி மட்டும் பேசவில்லை என்றும், எந்தவொரு நபராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக முறையான மற்றும் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், எவ்வித அரசியல் உள்நோக்கமும் இன்றி, நாட்டின் சட்டத்திற்கு அமையவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்பதைத் தாங்கள் மிகவும் தெளிவாக வலியுறுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

