சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஜனாதிபதிக்கு விசேட கடிதம்
Meiveli Media Team

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கிளிநொச்சி உதயநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சன், தனது இனத்தின் வரலாற்று வலிகள், இழப்புகள் மற்றும் உணர்வுகளை இசை மற்றும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு கலைப் படைப்பின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை குற்றமாகக் கருதி, ஓர் இளைஞனின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களிடையே பெரும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலத்தில் இத்தகைய கைது இடம்பெற்றிருப்பது, மக்களிடையே ஏமாற்றத்தையும் நம்பிக்கைச் சிதைவையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சங்கீத்சனின் கைது அவரது கல்வி, தொழில், சமூக வாழ்க்கை மற்றும் கலைப் பயணத்தை கடுமையாகப் பாதித்துள்ளதுடன், அவரது குடும்பமும் மன, சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனிதாபிமானம், நல்லிணக்கம் மற்றும் சமநீதியின் அடிப்படையில் ஜனாதிபதி தலையீடு செய்து, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பொது மன்னிப்பு வழங்கி, கலைஞர் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களின் நீதியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதோடு, இன நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

