முற்போக்கு தேசியவாதத்துடன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தயார் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து
Meiveli Media Team

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முற்போக்கு தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அதற்குத் தடையாக உள்ள அம்சங்களை நீக்கி அனைவரையும் உள்ளடக்கிய தேசிய இணக்கப்பாட்டை நோக்கிச் செல்லத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தேசிய சமாதான பேரவையின் 2026 ஆம் ஆண்டுக்கான சர்வமத மாநாட்டில் உரையாற்றிய அவர், அண்மைக் காலங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை மக்கள், தற்போது மத்திய கிழக்கு மோதல்களின் தாக்கங்களையும் எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். நாட்டை அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் வலுப்படுத்துவதற்கு அனைத்து சமூகங்களின் மதம், கலாசாரம் மற்றும் அடையாளங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இன, மத மற்றும் பொருளாதார வேறுபாடுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், வளங்களும் வாய்ப்புகளும் அனைத்து மாகாணங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றார். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதங்களை மறந்து, மனிதாபிமானம், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக பங்கேற்பை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

