தரமற்ற முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராகச் சட்டங்கள் கடுமையாக்கப்படும்!
Meiveli Media Team

நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு அமையாமல் நடத்தப்பட்டு வரும் முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமான விதிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டு முடிவடைந்துள்ளதாகவும், அதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளுடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்ததன் பின்னர், இந்த புதிய விதிமுறைகள் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார். இதற்கமைய, நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் அனைத்து முதியோர் பராமரிப்பு நிலையங்களும் இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டே செயற்பட வேண்டும். அதேவேளை, பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமான இடங்களில் முதியவர்களைத் தங்க வைப்பதைத் தவிர்க்குமாறு அவர்களின் பாரமரிப்பாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இயங்கி வரும் முதியோர் இல்லங்களில் சில நிறுவனங்கள் மிகச் சிறந்த மட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்த போதிலும், சில இடங்களில் போதிய வசதிகள், பாதுகாப்பு மற்றும் தேவையான ஊழியர் பற்றாக்குறை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் தற்போது சுமார் 455 பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதுடன், அரசாங்கத்தினால் நேரடியாக நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 03 மாத்திரமே என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

