அரசாங்கத்தின் தவறான பொருளாதார முடிவுகளால் டொலர் மீண்டும் அதிகரிப்பு; ஜனாதிபதியின் ‘கற்பனைக் கதைகளால்’ நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது – முஜிபுர் ரஹ்மான்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கத்திற்கு முறையான பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாததன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி முதன்மைக் காரியாலயத்தில் இன்றைய தினம் (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார்.

அவர் மேலும் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த வாரம் டொலரின் மதிப்பு சந்தையில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக அசாதாரணமாக உயர்ந்தது. அதனை கட்டுப்படுத்த மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கு டொலர்களை வழங்கிய போதிலும், தற்போது மீண்டும் டொலரின் மதிப்பு அதிகரித்து இன்று 339.50 ரூபாயை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 695 மில்லியன் டொலர் போன்ற பெருந்தொகை கிடைத்த போதிலும் ரூபாயை வலுப்படுத்த அரசாங்கத்தால் முடியவில்லை.
அரசாங்கத்தின் மீதான சந்தை நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதால், வெளிநாட்டு ஊழியர்களும் ஏற்றுமதியாளர்களும் டொலர்களை நாட்டுக்கு அனுப்புவதில் தாமதம் காட்டுகின்றனர்.

டொலரின் மதிப்பு மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் வர்த்தகர்கள் டொலர்களைத் தம் வசம் வைத்துள்ளனர்.
மறுபுறம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நெருங்கிய நண்பர்களுக்கு சாதகமாக 1700 வாகனங்களை இறக்குமதி செய்ய 200 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் உறுதிப்பத்திரங்கள் அவசர அவசரமாக வழங்கப்பட்டுள்ளன.

மே 16ஆம் திகதி வர்த்தமானி வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பே, அதாவது மே 15ஆம் திகதியே இந்தக் கடன் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. காற்றாலை மின் உற்பத்தி மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கு அனுமதி பெற்ற அதே தரப்பினருக்கே இந்த வாகன இறக்குமதி அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தின் இலாபங்களை ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களே அனுபவிக்கின்றனர்.
மத்திய வங்கி அதிகாரப்பூர்வமற்ற முறையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு மாத்திரமே கடன் கடிதங்களை வழங்குமாறு வணிக வங்கிகளுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து மத்திய வங்கி உடனடியாக நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

ஜனாதிபதி திறைசேரி நிரம்பியுள்ளதாகக் கூறினாலும், மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவை போன்றே தற்போதைய அரசாங்கமும் தன்னிச்சையான, அவசர பொருளாதார முடிவுகளை எடுத்து வருகின்றது. இதன் இறுதிப் பாதிப்பை நாட்டின் ஏழை மக்களே அனுபவிக்க வேண்டியுள்ளது.

மேலும், ஜனாதிபதி தான் 20 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்யப் போவதாகக் கூறுகிறார். 20 வருடங்கள் பற்றி பிறகு பேசலாம், முதலில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நாட்டைச் சரியாக வழிநடத்திக் காட்டுமாறு சவால் விடுக்கிறோம்.

அரசாங்கத்தின் மீதான மக்கள் மற்றும் ஜே.வி.பி ஆதரவாளர்களின் விரக்தியை மூடிமறைக்கவே ஜனாதிபதி இவ்வாறான வெற்று அறிக்கைகளை விடுத்து வருகிறார்.

மக்களைக் கவரும் அரசியல் பேச்சுகளால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும். மக்களின் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியின் ‘கற்பனைக கதைகள்’ மூலம் தீர்வு காண முடியாது என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.