அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு
Meiveli Media Team

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிக மக்களை இணைக்கும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக தனது எதிர்காலத் திட்டங்களை வெளியிட்ட அவர், 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து ஆறு ஆண்டுகள் தமிழக மக்களுக்காக பணியாற்றியதை பெரும் பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்தார்.
தனது அரசியல் இலக்குகள் பெரியவை என்றும், அடிப்படை அரசியல் கட்டமைப்புகளை மாற்றக்கூடிய புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாஜகவிலிருந்து விலகியதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் விரைவில் ஒரு புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்படவுள்ளதாகவும், அடுத்த பொதுத் தேர்தலில் அந்த இயக்கம் கட்சியாக உருவெடுத்து போட்டியிடும் என்றும் அண்ணாமலை அறிவித்தார். புதிய தலைமுறையினரை அரசியலுக்குள் கொண்டு வருவதற்காக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களை உருவாக்கும் பயிற்சி முறைமைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பதவிக்கால வரம்பு கொண்ட அரசியல் அமைப்பை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும், நிரந்தர எம்.எல்.ஏ., நிரந்தர எம்.பி. என்ற அரசியல் கலாசாரத்தை மாற்றப்போவதாகவும் குறிப்பிட்டார். தனது புதிய இயக்கத்தின் கொள்கை ‘மாறுவோம்; மாற்றுவோம்’ என்பதாக இருக்கும் என்றும், தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றுவதே இயக்கத்தின் பிரதான இலக்கு என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகக் கூறிய அவர், அனைத்து அரசியல் கட்சிகளையும் சமநிலையுடன் அணுகி, நாகரிக அரசியலை முன்னெடுக்கப்போவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

