பௌத்த சாசனத்தைக் காக்க ஒன்றிணைந்த தலைவர்கள்: கண்ணீரும் உழைப்பும் கலந்த அனுபவங்களை பகிர்ந்த ஞானசார தேரர்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய சூழ்நிலையில் பௌத்த சாசனம் எதிர்கொண்டுள்ள பாரிய சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கூட்டு எதிர்க்கட்சியினருடன் கலந்துரையாடி, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், சாசனம் என்பது பௌத்த பிக்குகள் மாத்திரமன்றி, பிக்குணிகள், உபாசகர்கள், உபாசிகைகள் ஆகிய நான்கு தரப்பினரையும் உள்ளடக்கியதாகும் என சுட்டிக்காட்டினார்.
மேலும், ருவன்வெலிசாய அல்லது ஸ்ரீ மகாபோதி போன்ற புனித வழிபாட்டுத் தலங்கள் மாத்திரமே சாசனம் ஆகாது என்றும், இந்த ஒட்டுமொத்த பௌத்த சமூகமுமே சாசனத்தின் தூண்கள் என்றும் அவர் விளக்கமளித்தார்.
சாசனம் எதிர்நோக்கியுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு எவ்வாறு முறையான தீர்வுகளைக் காண்பது என்பது குறித்து, பௌத்த பிக்குகள் பலரின் பங்கேற்புடன் இன்று ஒரு முறையான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் நாட்டின் சட்ட உருவாக்க பணிகளில் பங்களிப்பு வழங்கிய முக்கிய சட்ட வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
பௌத்த சாசனத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து தங்களின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் இதன்போது பகிர்ந்து கொண்டதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.

