தமிழரசுக் கட்சியில் 77 வருடம் இல்லாத சர்ச்சை: தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் கவலை

Meiveli Media Team


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் தற்போது கட்சிக்குள் திணிக்கப்படுகின்றன என  தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சேவியர் குலநாயகம்  குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்டக் கிளைக் கூட்டம் தொடர்பாக மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

கடந்த மே 31ஆம் தேதி நடைபெற்ற மாவட்டக் கிளைக் கூட்டத்தில் தலைவர் தெரிவின்போது ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மாவட்டக் கிளைத் தலைவர் வரமுடியாத நிலையில், கூட்டத்திற்கு தலைமை தாங்குமாறு தாம் சிவஞானம் அவர்களிடம் கேட்டதாகவும், ஆனால் கூட்டம் ஆரம்பமானதும் தலைமைப் பொறுப்பு எம் ஏ சுமந்திரன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் தெரிவின்போது மாற்று யோசனைகளுக்கு இடமளிக்காமல், ஆட்சேபனைகளைப் புறக்கணித்து தலைவர் நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கட்சிக்குள் ஜனநாயக செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்ற போதிலும், அடாவடித்தனமும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சிக்குள் காணப்படும் பதவி மோகம், பிரதேசவாதம் மற்றும் போட்டித்தன்மைகள் தொடர்ந்தால், ஏற்கனவே பலவீனமடைந்துள்ள கட்சியின் நிலை மேலும் மோசமடையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தன்னுடைய 62 ஆண்டுகால கட்சி அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், இந்த விவகாரத்தை மத்திய செயற்குழு அவசரமாக ஆராய்ந்து தகுந்த தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத் தலைவர் தெரிவு தொடர்பான நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பதுடன், இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் முன்னுதாரணமாக மாறக் கூடாது என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.