கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ்ப்பாண நீதிமன்றம் அதிரடி உத்தரவு: 14 ஆண்டு கால லலித் – குகன் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையில் லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரப்பட்டு வரும் வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இன்று மிக முக்கிய உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின்படி, கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகி இவ்வழக்குத் தொடர்பாக சாட்சியமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவு குறித்து முன்னிலை சோஷலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் இலங்கையானது முழுமையான அரச அனுசரணையுடன் பல்லாயிரக்கணக்கான மக்களை அநியாயமாகக் காணாமல் ஆக்கிய ஒரு ‘குற்றவியல் நாடாக’ செயற்பட்டது. குறிப்பாக, 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளதாக, அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட பொதுமக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் வடக்கு மற்றும் கிழக்கில் தீவிரமாகப் போராடி, குரல் எழுப்பியவர்களே லலித் மற்றும் குகன் ஆகிய இருவராவர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய இந்த இரு தலைவர்களுமே அரசினால் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர்.
அதுமட்டுமன்றி, இந்தக் கடத்தல்களுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியங்களும் திட்டமிட்ட முறையில் மறைக்கப்பட்டன.
மக்களைக் கடத்தி, கடத்தப்பட்டவர்களுக்காகப் போராடியவர்களையும் கடத்தி, பின்னர் அதற்குரிய சாட்சியங்களையும் அழித்த அரசாங்கம், இறுதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கையும் கூட இல்லாமல் செய்யவே கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினூடாக முயன்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், வழக்குகளையோ அல்லது சாட்சியங்களையோ இனிமேலும் மறைக்கவோ, அமுக்கவோ முடியாது என்பதை யாழ்ப்பாண நீதிமன்றம் தனது தீர்க்கமான உத்தரவின் மூலம் இன்று உறுதிப்படுத்தியுள்ளதுடன், வழக்கை முடக்குவதற்குப் போடப்பட்ட சதிகளையும் முறியடித்துள்ளது.
இவ்வழக்கில் லலித், குகன் ஆகிய இருவர் மட்டுமன்றி, கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மேலும் 50 இற்கும் மேற்பட்டோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு நேரில் வந்து சாட்சியமளிப்பதன் மூலம், இந்த சட்டவிரோதமான கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்த அரசியல் படுகொலைகள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் எனப் போராடும் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பானது நீதிக்கான போராட்டத்தில் கிடைத்துள்ள ஒரு சாதகமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாகும் என்று தெரிவித்த புபுது ஜயகொட, இந்த நீதிக்கான போராட்டத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியான மக்கள் போராட்டங்களாகவும் எவ்வித தடையுமின்றி தமது கட்சி தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக உறுதியளித்தார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ஷ உரிய சட்ட நடைமுறைகளின்படி நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியமளித்தே தீர வேண்டும் என்றும், இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும் என்றும் அவர் தனது ஊடக அறிக்கையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


