தற்போதைய ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற கொள்கைகளால் நாடு மீண்டும் பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி நகர்றது: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை
Meiveli Media Team

இலங்கை ரூபாயை வலுப்படுத்துவதே தனது பொருளாதாரக் கொள்கையின் முதன்மையான நோக்கமாக இருந்தது எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கையாளுமைகளையும் டொலர் நெருக்கடியையும் கடுமையாக விமர்சித்தார். அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற கொள்கைகளால் நாடு மீண்டும் பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி நகர்வதாக எச்சரித்தார். தற்போதைய பொருளாதாரப் பின்னடைவு குறித்துப் பேசிய ரணில் விக்ரமசிங்க, டொலரின் கட்டுப்பாட்டை அரசாங்கம் ஆரம்பத்திலேயே தவறவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே டொலரின் மதிப்பை 280 ரூபா மட்டத்தில் தக்கவைப்பதற்கான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. இன்று டொலர் 320 ரூபா வரை சென்றுவிட்டது. அதாவது 30 ரூபாவால் அதிகரித்துள்ளது. இப்போது இதனை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்வது என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள். வெளிநாட்டு கையிருப்புப் பற்றாக்குறை என்பது ஒரு நாட்டிற்கு ஏற்படும் மிகப்பெரிய வருமானப் பற்றாக்குறையாகும். இந்தத் பிரச்சினைக்கு மிக விரைவாகத் தீர்வு காணாவிட்டால் நாடு பேரழிவைச் சந்திக்கும். தடுக்கப்பட்ட இலங்கை – இந்திய திட்டங்களினால் நாட்டிற்கு 5 டிரில்லியன் பொருளாதாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தான் ஆட்சியில் இருந்தபோது இலங்கையை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்க எடுத்த தொலைநோக்கு முயற்சிகள் உள்நாட்டு எதிர்ப்புகளால் முறியடிக்கப்பட்டது.
இந்தியாவுடன் இணைந்து சேதுசமுத்திரம் திட்டத்தையும்இ இரு நாடுகளுக்கும் இடையிலான பாலத்தையும் அமைக்க முயற்சித்தேன். ஆனால் இவை யாருடைய எதிர்ப்புகளினால் நிறுத்தப்பட்டன? அந்தத் திட்டங்கள் மட்டும் தொடங்கப்பட்டிருந்தால், சுமார் பத்து வருடங்களுக்கு நாட்டில் கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக நடந்திருக்கும்.
அதன் மூலம் 5 டிரில்லியன் ரூபா பெறுமதியான பொருளாதாரம் நமது நாட்டுடன் இணைந்திருக்கும். அதேபோல், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருள் குழாய் இணைப்பை ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டிருந்தேன். அதற்கு இடம் கொடுத்தார்களா? இல்லை. போலி காரணங்களை கூறி எதிர்த்தனர். அதைச் செய்திருந்தால், இந்தியாவுக்குக் கிடைக்கும் அதே குறைந்த விலையிலேயே நமக்கும் தங்குதடையின்றி எரிபொருளைப் பெற்றிருக்க முடியும். தற்போதைய ஆட்சியாளர்கள் வங்கிகளுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர். டொலரின் மதிப்பை 330 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கக் கூடாது என அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். விரைவில் 1 பில்லியன் டொலர் நாட்டுக்கு வரவுள்ளதாகக் கூறியே இந்த தற்காலிக அழுத்தத்தைப் பிரயோகிக்கிறார்கள். ஆனால்இ 1 பில்லியன் டொலர் வந்தாலும் சந்தையில் பெரிய மாற்றம் எதுவும் நடந்துவிடாது. இன்று உலகப் பொருளாதாரம் மாறிவிட்டது என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

