இலங்கை தேசிய மருத்துவமனையின் புதுப்பிக்கப்பட்ட நரம்பியல் நிறுவனம் இன்று திறப்பு: 99 மில்லியன் ரூபா செலவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையில் நரம்பியல் சம்பந்தமான மருத்துவ சேவைகளை மேலும் வினைத்திறனான முறையில் முன்னெடுக்கும் நோக்கில், கொழும்பு இலங்கை தேசிய மருத்துவமனையில் (NHSL) 99 மில்லியன் ரூபா செலவில் முழுமையாக புனரமைக்கப்பட்ட “நரம்பியல் நிறுவனம்” (Institute of Neurology) இன்றைய தினம் (01) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மூளை, முள்ளந்தண்டு வடம், நரம்பு மற்றும் தசை மண்டலம் தொடர்பான நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் இந்நிலையம், 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பின்னர் நீண்டகாலமாக நவீனமயமாக்கப்படாமல் இருந்தது. இதனை கருத்திற்கொண்டு, தற்போதைய அரசினால் மீளமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தரைத்தளத்தின் புனரமைப்புக்கு 22 மில்லியன் ரூபாவும், முதல் மாடியின் புனரமைப்புக்கு 52 மில்லியன் ரூபாவும், மூன்றாம் மாடியின் புனரமைப்புக்கு 25 மில்லியன் ரூபாவும் என மொத்தம் 99 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இங்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட நரம்பியல் பிரிவின் வார்டு 62 மற்றும் 63 ஆகியவற்றில், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் என பிரிக்கப்பட்டு மொத்தம் 22 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், இன்றைய தினம் முதலாவது நோயாளி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மற்றும் பதிவு நடைமுறைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்தத் திறப்பு விழாவையொட்டி, நரம்பியல் நிறுவனத்தின் நிறுவனரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான தேசமான்ய வித்யா ஜோதி நிபுணர் டாக்டர் ஜே.பி. பீரிஸின் உருவப்படம் சுகாதார அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, சுகாதாரத்துறையின் மனிதவள மேம்பாடு மற்றும் தற்போதைய செயல்பாடுகள் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதன்படி, சுமார் 1,900 சுகாதார உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான பத்திரிகை விளம்பரத்திற்கு 92,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களைப் போல அரசியல்வாதிகளின் பட்டியல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், தகுதியின் அடிப்படையில் முறையான நேர்காணல்கள் மூலம் இவர்கள் வெளிப்படையான முறையில் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அண்மையில் 515 தாதி பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மேலும் 2,600 தாதி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் என்ற வகையில் சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை எனத் தெரிவித்த அமைச்சர், இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறைக்காக 619 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு 19 பில்லியன் ரூபாவும், கட்டிடங்கள் புனரமைக்க 9 பில்லியன் ரூபாவும், புதிய உபகரணங்கள் வாங்குவதற்கு 28 பில்லியன் ரூபாவும், உபகரணங்கள் புனரமைப்பிற்கு மேலும் 8.5 பில்லியன் ரூபாவும் என மொத்தம் 22 பில்லியன் ரூபா உள்கட்டமைப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு 754 மில்லியன் ரூபா செலவில் நாட்டின் மருத்துவமனை கட்டமைப்பிற்கு 5 நவீன மேமோகிராபி (Mammography) இயந்திரங்கள் மற்றும் 16 கேத் ஆய்வகங்கள் (Cath Labs) வழங்கப்படவுள்ளதாகவும், 2029 ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் சுகாதார சேவையை கணிக்கக்கூடிய ஒரு திட்டமிட்ட இலக்கை நோக்கி நகர்த்துவதே அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர், மேலதிக செயலாளர் அனில் ஜசிங்க, பிரதி பணிப்பாளர்களான குமார விக்ரமசிங்க, அர்ஜுன திலகரத்ன, இலங்கை தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் நாயகம் சுரங்க தொலமுல்ல, பிரதி பணிப்பாளர்கள் பிரதீப் விஜேசிங்க, பிரதீப் ரத்னசேகர, இந்திக ஜகோடா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய நரம்பியல் நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.