சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து: டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்

Meiveli Media Team

பிரதமரைத் தொடர்ந்து  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் விஜய் சந்திப்பார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.ஆனால் திடீரென  டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்க இருந்த திட்டம் ரத்தானது இது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சூழலில் நேற்று காலை 10 மணியளவில் டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு தனி விமானத்தில் விஜய் சென்னை திரும்பினார். முன்னதாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வழக்கமாக கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின்இ பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் முதல்வர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தால் தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்தது பேசுபொருளானது. காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பியதில் பல்வேறு அரசியல் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
காவிரி விவகாரம் மற்றும் தமிழகத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எழுந்த குதிரை பேர சர்ச்சைகள், கர்நாடக காங்கிரஸில் வெடித்துள்ள உள்கட்சி பிரச்சினை போன்றவற்றால் இப்போது காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தால் அது தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் என்பதால் விஜய் இந்தச் சந்திப்பைத் தவிர்த்ததாக ஒருதரப்பில் தகவல்கள் கூறப்படுகின்றன. ஆனால் மற்றொரு தரப்போ காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு நடைபெறாததற்கு பின்னணியில் சில அரசியல் அழுத்தங்களும் இருக்கலாம் என தெரிவித்தனர்.இந்தச் சர்ச்சை குறித்து காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக் கூறியபோது, இதனை தமிழக முதல்வர் ஒரு அரசுமுறைப் பயணமாக மட்டுமே வைத்திருக்க விரும்பியிருக்கலாம். அதனால்தான் பிரதமரை மட்டும் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ளார். ஜூன் 11-ம் தேதி முதல்வர் மீண்டும் டெல்லி வரவுள்ளார். அப்போது நிச்சயமாக சோனியா, ராகுலைச் சந்திப்பார் எனத் தெரிவித்தார்.
மேலும், தற்போது ஜார்கண்ட் மாநிலங்களவை சீட், கர்நாடகாவில் முதல்வர் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த விவாதங்கள் சோனியா இல்லத்தில் தீவிரமாக நடந்து வருவதால், தமிழக முதல்வருடன் விரிவாக அமர்ந்து பேசுவதற்கான நேரமும் வாய்ப்பும் காங்கிரஸ் தலைவர்களுக்குக் குறைவாக இருந்தது. இதில் யோசிப்பதற்கோ அல்லது எதிர்மறையாக நினைப்பதற்கோ எதுவும் இல்லை. நாங்கள் தவெக கூட்டணியில் நீடிக்கிறோம், அமைச்சரவையிலும் இருக்கிறோம். எனவே, நாங்கள் சந்திப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. விஜய் முதல்வராக பதவியேற்றபோது ராகுல்தான் முதல் ஆளாக வந்து பங்கேற்றார். சோனியா காந்தி இல்லத்தில் முதல்வருக்கு விருந்து கொடுக்கத் திட்டமிடப்பட்டிருக்கலாம். ஆனால்,காங்கிரஸ் தலைமை சில முக்கிய உள்கட்சி முடிவுகளை எடுக்க வேண்டியிருந்ததால், அது அடுத்த முறைக்குதள்ளிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.