கிரிஷ் பணமோசடி வழக்கு: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணை ஜூலை மாதம் ஆரம்பம்! சாட்சியமளிக்க பயப்படப் போவதில்லை என நாமல் தெரிவிப்பு..!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த புதிய திகதி அறிவிக்கப்பட்டது. இந்தியாவை தளமாகக் கொண்ட ‘கிரிஷ் லங்கா’ நிறுவனத்திடமிருந்து இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, 70 மில்லியன் ரூபாயைப் பெற்று அதனைத் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குற்றவியல் நம்பிக்கை துரோகம் புரிந்ததாகவும் நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, இவ்வழக்கில் சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மேல் நீதிமன்றத்தில் வழக்குப் பரிசீலனைகள் மற்றும் முன்திரையிடல் மாநாடுகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சாட்சி விசாரணைகளுக்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அமர்வைத் தொடர்ந்து, வெளியில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ச, தாம் சட்டத்திற்கு மதிப்பளித்து நீதிமன்றத்தில் முன்னிலையாகி, ஆரம்பக்கட்ட விசாரணைகளை எதிர்கொண்டு, அடுத்த வழக்குத் திகதியையும் பெற்றுக்கொண்டே வெளியே வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
எங்கு எப்போது தேவையோ, அங்கெல்லாம் தாம் முன்னிலையாகத் தயாராகவே இருப்பதாகவும், நீதிமன்றத்திற்கு வர முடியாதவர்கள் தங்களது சட்டத்தரணிகள் மூலம் சட்ட உதவியை நாடியுள்ள நிலையில், தாம் ஒருபோதும் ஒளிந்து வாழவில்லை என்றும் மறைந்திருக்கவும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் தற்போதைய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இப்போது ஆட்சியில் இருக்கும் தரப்பினர் 2005ஆம் ஆண்டு முதலே அந்த சிரேஷ்ட ராஜபக்சக்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவர்கள் என்று நாமல் ராஜபக்ச பதிலளித்தார்.
அவர்கள் தினமும் மாலை வேளையில் நாட்டின் நிலைமை குறித்துப் பேசுவதற்காக அவர்களிடம் செல்வது வழக்கம் என்றும், தன்னிடம் இந்தக் கேள்விகளைக் கேட்பதை விடுத்து, ‘அவர்கள் எப்போது தங்களோடு இணைவார்கள்?’ என்று தற்போதைய ஆட்சியாளர்களிடமே ஊடகங்கள் கேட்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.
மேலும், தமக்கு அவர்கள் ‘பெரியப்பா’ முறை வேண்டும் என்றும், ஆனால் இந்த ஆட்சியாளர்களுக்கு அவர்கள் நெருங்கிய ‘நண்பர்கள்’ என்றும் குறிப்பிட்ட அவர், வீண் அரட்டைகளில் ஈடுபடுவதை விடுத்து, ஆட்சியாளர்களிடமே இது பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு கூறிச் சென்றார்.


