அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் குரல் ஒடுக்கப்படக் கூடாது! – கஜேந்திரகுமார் பகிரங்க கோரிக்கை

Meiveli Media Team

தமிழ் இனப்படுகொலை குரல்கொடுத்த  அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் குரல் ஒடுக்கப்படக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம் பலம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் இனப்படுகொலை தொடர்பாக கத்தோலிக்க அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்  ஆற்றிய உரை, பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான தேடலில் ஒரு மிக முக்கியமான பதிவாகும். அவரது கருத்துக்கள் முற்றிலும் உண்மையானவை மற்றும் நியாயமானவை. இருப்பினும், இத்தகைய உண்மைகள் தெற்கில் உள்ள சாதாரண சிங்கள மக்களைச் சென்றடைந்து, அவர்கள் மத்தியில் ஒரு புரிதலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் தீவிர இனவாத அரசியல் தரப்புகள் மிகுந்த கவனமாக உள்ளன.

அந்த உண்மைகள் பொதுவெளிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்களின் கருத்துக்களுக்கு எதிரான ஒரு பிம்பத்தை உருவாக்கி, அவரை விவாதங்களில் இருந்து விலக்கி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் அவதானிக்க முடிகிறது. பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டும் என்பதே கத்தோலிக்க திருச்சபையின் உன்னதமான கொள்கையாகும். இந்நிலையில், அருட்தந்தை ஜூன் நிஷாந்த ஊடகங்களில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் கருத்துக்களைச் விமர்சித்து பேசியிருப்பது கவலை அளிக்கிறது. திருச்சபைக்குள்ளேயே இருந்து இத்தகைய மாற்று கருத்துக்கள் முன்வைக்கப்படுவது, நீதிக்காகத் துணிந்து குரல் கொடுக்கும் ஒருவரைத் தனிமைப்படுத்தும் சூழலையே உருவாக்கும். பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக தெற்கிலிருந்து ஒலிக்கும் இத்தகைய நேர்மையான குரல்களை மதிப்பதும், உண்மைகள் பொதுமக்களிடம் சென்றடைவதை உறுதி செய்வதும் எமது சமூகப் பொறுப்பாகும் என்றார்.