தமிழர்களுக்கான நீதியில்  அனைத்துலக சட்ட நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தி நெதர்லாந்தில் மாநாடு

Meiveli Media Team

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் ஐந்தாவது நேரடி அமர்வு, நெதர்லாந்தின் The Hague நகரில் மே 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த அமர்வில் அரசியல், மனித உரிமைகள், சர்வதேச நீதி மற்றும் தமிழீழத்தின் அரசியல் எதிர்காலம் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.மே 18 ஆம் திகதி நடைபெற்ற முதல் நாள் நிகழ்வுகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் தலைமையில் ஆரம்பமானது. சட்டத்துறை ஆய்வு, மனித உரிமைகள் செயற்பாடுகள் மற்றும் இளையோரின் கல்விசார் சந்திப்புகள் நடைபெற்றன. பின்னர் மாலை நேரத்தில், சர்வதேச மனித உரிமை செயற்பாடுகளுக்குப் பெயர் பெற்ற Humanity Hub மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நடைபெற்றது. இந்நிகழ்வில் சர்வதேச சட்ட வல்லுநர் Toby Cadman பிரதான உரையாற்றி, தமிழர்களுக்கான நீதி மற்றும் அனைத்துலக சட்ட நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.இரண்டாம் நாள் நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றல், பொதுச்சுடர் ஏற்றல், நெதர்லாந்து தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவி பிரதமர் மகிந்தன் சிவசுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார்.வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50வது ஆண்டு மற்றும் ஈழத்தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு அமர்வில், Anne McLaughlin, S. Shritharan, பிரான்சின் லாகுறேனேவ் நகரசபை உதவி மேயர் சபறினா கணேஸ்வரன் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டவாளர் லோறன்ஸ் உள்ளிட்டோர் கருத்துரைகள் வழங்கினர். தமிழர்களின் அரசியல் உரிமைகள், தன்னாட்சிக்கான கோரிக்கை மற்றும் அனைத்துலக சமூதாயத்தின் பங்களிப்பு ஆகியவை இங்கு வலியுறுத்தப்பட்டன.மாலை அமர்வில் கீழ்சபை மற்றும் மேல்சபை உறுப்பினர்கள் இணைந்து கலந்துரையாடல் நடத்தினர். இதில் தமிழீழத்திற்கான அரசியல் யாப்பு வரைபு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மே 20 ஆம் திகதி நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வுகள், சர்வதேச நீதி தொடர்பான ஆவணப்படத் திரையிடலுடன் ஆரம்பமானது. பிரான்சின் “எம் இனம்” இளையோர் அமைப்பின் முயற்சியில் இரண்டு பிரெஞ்சு பெண் ஊடகவியலாளர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம், தமிழர்களின் நீதி போராட்டத்தை மையப்படுத்தியது.திரையிடலுக்கு பின்னர், ஆவணப்படத்தை தயாரித்த பிரெஞ்சு இளையோரும், “எம் இனம்” அமைப்பினரும் கலந்து கொண்ட நேர்காணல் இடம்பெற்றது. நெதர்லாந்து இளையோர் செயற்பாட்டாளர் லக்ஸலா ஜோன் இந்த கலந்துரையாடலை வழிநடத்தினார்.தொடர்ந்து அமைச்சர்களின் அறிக்கைகள் அவையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில்கள் வழங்கப்பட்டன. இறுதியில் சர்வதேச சட்டவாளர் லோறன்ஸ் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் Visuvanathan Rudrakumaran தமது நிறைவு கருத்துக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.