போர்வீரர் நினைவு ஒத்திகையை கலைக்க முயற்சி: முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

 

பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (25) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸாரால் அவர் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப் பிணையின் கீழ் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.