அரசாங்கத்தின் ஊழல் மற்றும் திறமையின்மையால் நாடு மீண்டும் பொருளாதார படுகுழிக்குள்: கொழும்பில் எதிர்க்கட்சிகள் கூட்டாகக் குற்றச்சாட்டு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்றைய தினம் கொழும்பு 3, ப்ளவர் வீதி ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் “மக்களின் குரல்” ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க மற்றும் முன்னாள் அமைச்சர் அஜித் மான்னப்பெரும ஆகியோர் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளையும் நிர்வாகத் திறமையின்மையையும் கடுமையாகச் சாடினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க, தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மை காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அதற்கு அரசாங்கமே காரணம் எனக் குற்றம் சாட்டிய அன்றைய எதிர்க்கட்சியான ஜே.வி.பி, இன்று சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தவுடன் அதனை உலகளாவிய ரீதியிலான அழுத்தம் என சாக்குப்போக்கு கூறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உலக சந்தையில் டீசல் விலை அதிகரிப்பால் ரூபாய் வீழ்ச்சியடைவதாக மத்திய வங்கி ஆளுநர் கூறினாலும், உண்மையில் தற்போதைய நிலக்கரி ஊழல் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் டீசலில் 20% வீணடிக்கப்படுவதாக அவர் வெளிப்படுத்தினார்.
ரூபாய் வீழ்ச்சியால் மட்டும் நாட்டின் கடன் சுமை 2,000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதோடு, பருப்பு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.
ஒருபுறம் ஜனாதிபதி மக்களை எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கூறிக்கொண்டு, மறுபுறம் தனது கூட்டங்களுக்கு நாடு முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான பஸ்களைப் பயன்படுத்தி பெருமளவு எரிபொருளை வீணடிப்பதாகவும், அனுபவமற்ற இந்த “L” போர்டு அரசாங்கம் நாட்டை மீண்டும் ஒரு மோசமான பொருளாதாரப் படுகுழிக்கு தள்ளியுள்ளது மிகத் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் அஜித் மான்னப்பெரும, 76 வருட சாபத்தைப் பற்றிப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று உலகப் போர் மற்றும் தற்காலிக அதிர்வுகள் எனக் கூறி விலையேற்றங்களை நியாயப்படுத்தி மக்களுக்கு அதீத சாபமாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
ரணில் விக்ரமசிங்க ஆட்சியை ஒப்படைக்கும்போது 291 ரூபாவாகக் குறைக்கப்பட்டிருந்த டொலரின் மதிப்பு, இன்று அநுர குமார திஸாநாயக்கவின் திறமையின்மையால் 340 ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் 3,700 ரூபாவாக இருந்த எரிவாயு சிலிண்டரின் விலை இன்று 6,300 ரூபாவாகவும், 283 ரூபாவாக இருந்த டீசல் லீட்டர் 392 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால், கறுப்புச் சந்தையில் அவசரமாக டீசல் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு மின்சாரக் கட்டணமும் எரிபொருள் விலையும் விண்ணைத் தொட்டுள்ளதாக அவர் சாடினார்.
அத்துடன், இந்த அரசாங்கத்தின் காலத்தில் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் மாயமாகியுள்ளதோடு, மத்திய வங்கியில் 78 கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஒரு ஹேக்கர் அல்லது “கண்ணுக்குத் தெரியாத சக்தி” செய்ததாகக் கூறி அரசாங்கம் மூடிமறைக்கப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஊழல்களின் சுமையை மக்கள் மீது ‘வட்’ வரி மற்றும் புதிய ‘டின்’ (TIN) இலக்க வரி மூலம் சுமத்தி, அதனைப் பெறாவிட்டால் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என மிரட்டுவதாகவும், இறுதியில் மக்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலையைத்தான் இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, பழைய திருடர்களைப் பிடிப்பதாகக் கூறி நாடகமாடுவதை நிறுத்திவிட்டு, தற்போதைய ஆட்சியில் இடம்பெற்ற கொள்கலன் கடத்தல், மத்திய வங்கிக் கொள்ளை மற்றும் நிலக்கரி ஊழல் போன்றவற்றுடன் தொடர்புடைய “புதிய திருடர்களை” உடனே கைது செய்து அரசாங்கத்தின் தூய்மையை நிரூபிக்க வேண்டும் என அவர் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார்.

