“இலங்கை போக்குவரத்துச் சபை தலைவரின் ஊழல்கள் குறித்து பெலவத்தைக்கு அறிவிப்போம்: பிரதீப் சார்லஸ் கடும் எச்சரிக்கை!”
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) தலைவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சுயதொழில் செய்பவர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்லஸ் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
பஸ் நிலைய மறுசீரமைப்புப் பணிகளின் போது தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி கமிஷன் பெற்றுக்கொண்டதாக போக்குவரத்துச் சபையின் தலைவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பஸ் நிலையத்திலுள்ள தற்போதைய கடைகளை அகற்றி, அவற்றை தனது ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்கும் அவர் தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
இது தவிர, பஸ் நிலையத்திற்குள் இயங்கி வரும் உணவகத்தின் நீர் மற்றும் மின்சார விநியோகத்தை துண்டித்தமை தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பால் நீதிமன்றத்தில் உண்மைகள் தெளிவுபடுத்தப்பட்டு சிவில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்பாணைக்கு இணங்க, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரும் அதன் நிறைவேற்று அதிகாரியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜரான போக்குவரத்துச் சபையின் தலைவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்த ஊழல் நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்த சுயதொழில் செய்பவர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்லஸ், போக்குவரத்துச் சபைத் தலைவரின் இந்த தன்னிச்சையான மற்றும் ஊழல் நிறைந்த செயல்பாடுகள் குறித்து தாங்கள் ‘பெலவத்தைக்கு’ (ஜேவிபி – தலைமையகத்திற்கு) உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகக் கூறி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

