கந்தளாயில் அதிரடிச் சுகாதாரப் பரிசோதனை: எலிக்காய்ச்சல் விழிப்புணர்வு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

கந்தளாய் பேராறு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதாரத் துறையினர் நேற்று அதிரடிச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) டாக்டர் நசீர் அகமட் அவர்களின் வழிகாட்டலின் கீழ், பொது சுகாதார பரிசோதகர் (PHI) அருள் மோகன் தலைமையிலான குழுவினர் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவலைத் தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்புகளும் வழங்கப்பட்டன.
பேராறு பகுதியில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட பல வர்த்தக நிலையங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகின்றனவா, விற்பனை நிலையங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பன தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அண்மையில் நிலவும் காலநிலை மாற்றங்களால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, நோய்த்தொற்று அபாயம் காணப்படும் நபர்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகள் முன்கூட்டியே வழங்கப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்கும், தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கும் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

