யோஷித்த ராஜபக்ஷவின் ஆரம்பகட்ட ஆட்சேபனை நிராகரிப்பு.வழக்கு விசாரணை ஆரம்பம்!
Meiveli Media Team

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனத் தெரிவித்து யோஷித்ரத ராஜபக்ஷ தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆரம்பகட்ட ஆட்சேபனை மனுவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க நிராகரித்தார்.பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் எவ்விதத் தடையுமில்லை என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.இதனைத் தொடர்ந்து, நீதிமன்றில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. இதன்போது, பதிலளித்த யோஷித்த ராஜபக்ஷ, தான் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.இதனையடுத்து, குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

