“அரசின் 159 மலர்களும் வாடிவிட்டன; சஜித்தின் குழுவைத் தேடி வரும் அரசாங்கத்தின் இறுதி முயற்சி இதுவே” – சரித் அபேசிங்க
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தற்போது பாரிய உட்கட்சிப் பிளவுகளுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகித் தடுமாறி வருவதாகவும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லத் தகுதியானவர்கள் இல்லாததால் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்முடன் இணைத்துக்கொள்ள அரசாங்கம் திரைமறைவில் முயற்சித்து வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க தெரிவித்தார்.
இன்றைய தினம் (14) எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அண்மையில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியின் பின்னர் வீடுகளுக்குள் வெள்ளம் புகாதது குறித்து மக்கள் கவலைப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம வெளியிட்ட கருத்து வேடிக்கையானது எனக் குறிப்பிட்டார்.
இத்தகைய குறுகிய சிந்தனையுடையவர்களுடன் நாட்டை ஆள முடியாது என்பதை தற்போது ஜே.வி.பி தலைமையகம் உணர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக தேசிய மக்கள் சக்தி கூட்டணி இலங்கை அரசியலில் இருந்து படிப்படியாக அழிந்து வரும் நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மிக நெருங்கிய நண்பர்களாகக் கருதப்படும் இருவர் அரசாங்கத்தின் நற்பெயரைச் சீரழித்துள்ளதாகச் சாடிய அவர், தேசியப் பட்டியலில் முன்னிலையில் இருந்த குமார ஜயகொடி என்பவர் நிலக்கரி மோசடியில் தொடர்புடையவர் என்பது தணிக்கை அறிக்கைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதேபோன்று, ஹர்ஷண சூரியப்பெரும என்பவர் திறைசேரி நிதி காணாமல் போனமைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நீண்டகாலமாக ஆயுதப் போராட்டங்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் ஊடாகக் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தை, ஜனாதிபதியின் நண்பர்கள் இருவர் சீரழிப்பது குறித்து பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி குழுவினர் கடும் அதிருப்தியில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் காலத்தில் தங்களது 159 பேரைத் தவிர வேறு தகுதியானவர்கள் நாட்டில் இல்லை எனக் கூறி வந்த அரசாங்கம், இன்று நாட்டை ஆளத் தகுதியான குழுவொன்று இல்லாமல் திண்டாடுவதையே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களைத் தேடி வருவதன் மூலம் வெளிப்படுத்துகிறது. அரசாங்கம் நட்டுவைத்த 159 மலர்ச் செடிகளும் தற்போது வாடிவிட்டதையே இது காட்டுகிறது எனத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் இந்த அரசியல் ‘மீன் பிடி’ நடவடிக்கை ஒரு தோல்வியடைந்த முயற்சியாகும் என்றும் கேலி செய்தார்.
தற்போது வரி மூலம் ட்ரில்லியன் கணக்கான பணத்தை மக்களிடமிருந்து அறவிடும் அரசாங்கம், எரிபொருள், மின்சாரம், உணவு, மருந்து மற்றும் போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தி மக்களைப் பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் மீறி வரும் அரசாங்கம், தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை மறைக்கவே தற்போது ‘தேசிய அரசாங்கம்’ என்ற கருத்தாக்கத்தை முன்னெடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை வளைக்கப் பார்க்கிறது. இதுவே இந்த அரசாங்கத்தின் இறுதி முயற்சியாக இருக்கும் என்றும், இதன் பின்னர் அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
திறமையான மற்றும் நம்பகமான அரசியல் குழு சஜித் பிரேமதாசவிடமே உள்ளது என்பதை தற்போது நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றும் சரித் அபேசிங்க மேலும் தெரிவித்தார்

