பிரபாகரனுக்கே அஞ்சாத மஹிந்த விசாரணைகளுக்கு அஞ்சப்போவதில்லை – முன்னாள் எம்.பி. சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவிப்பு
Meiveli Media Team

பயங்கரவாதத்தை ஒழித்து பிரபாகரனுக்கே அஞ்சாத மஹிந்த ராஜபக்ஷ, சாதாரண விசாரணை ஆணைக்குழுக்களுக்கு முன்னால் முன்னிலையாக ஒருபோதும் தயங்கப்போவதில்லை. எனினும், ஒரு நபர் விசாரணை அதிகாரிகளிடம் வழங்கும் சாதாரண வாக்குமூலத்தை விட, நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்படும் சத்தியக்கடதாசிக்கே அதிக சட்ட பெறுமானமும் சாட்சிய வலுவும் உள்ளது என்பதை சமூகமும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்பொழுது அழைத்துள்ளது. அவர் மிகவும் நிதானமாகவும் துணிச்சலாகவும் இந்த விசாரணைகளை எதிர்கொள்வார் என்பதில் எமக்கு எந்த ஐயமும் இல்லை.
ஆனால், இந்த விசாரணை முன்னெடுக்கப்படும் விதம் குறித்து நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன வழங்கியதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலவும் சட்ட முறைமைக்கு அமைய, பொலிஸார் அல்லது விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் அளிக்கப்படும் வெறும் வாக்குமூலங்களுக்கு மிகக் குறைந்த அளவிலான சட்ட மதிப்பாவே உள்ளது. ஆனால், ஒரு நபர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் சத்தியக்கடதாசி என்பது மிகவும் சக்திவாய்ந்ததும் பாரதூரமானதுமான சாட்சியமாகும். கபில சந்திரசேன ஏற்கனவே ஒரு சத்தியக்கடதாசியைச் சமர்ப்பித்துள்ளார். அதில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரிகள் விரும்பும் வகையில் வாக்குமூலத்தை வழங்காவிட்டால், அதன் விளைவு மரணமாக அமையும் எனத் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் அந்த சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பான விசாரணையின் போது தற்கொலை செய்து கொண்ட ஒருவரை முன்னுதாரணமாகக் காட்டி, தமக்கும் அத்தகைய நிலை ஏற்படும் என அதிகாரிகள் மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறானதொரு பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பலமான சத்தியக்கடதாசியை விசாரணைக்கு உட்படுத்தாமல், அதிகாரிகளின் அழுத்தத்தினால் பெறப்பட்ட வாக்குமூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷவை அழைப்பதன் நோக்கம் என்ன?அரசியல் களத்தைப் பொறுத்தவரை, எமது பிரதான போராட்டம் தற்போதைய அரசாங்கத்துடன் மட்டுமே உள்ளது. அரசாங்கம் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராகவே நாம் செயற்படுகிறோம். மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகக் கூறி வாக்குக் கேட்டு ஆட்சிக்கு வந்த அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இன்று மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் ஏற்கனவே இந்த அரசாங்கத்தைக் கைவிட்டுவிட்டார்கள். இதன் அரசியல் ரீதியான பாரிய வீழ்ச்சியை அரசாங்கம் நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும்.
தற்போதைய மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமும் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களுமே காரணமாகும். இதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். நாம் எமது இலக்கை நோக்கித் துல்லியமாக நகர்கிறோம். நாம் பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இந்த அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம். இத்தகைய தேவையற்ற விசாரணை அழைப்புகள் மூலம் எம்மை அச்சுறுத்தவோ அல்லது எமது அரசியல் பயணத்தைத் தடுக்கவோ முடியாது என்றார்

