நாளை முதல் மழையின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வுத் திணைக்களம் தகவல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் மழையுடனான வானிலை நாளை மாலை முதல் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் குறைந்த அழுத்த மண்டலத்தின் தாக்கம் நாளை மாலை அளவில் குறைவடைவதால், நாளைக்குப் பிறகு மழையின் வீரியம் நாட்டில் பெருமளவு தணியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று மழையின் அளவில் ஓரளவுக்குக் குறைவு தென்பட்ட போதிலும், நாட்டின் சில பகுதிகளில் இன்னும் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக மேல் மற்றும் சபரகமுவா மாகாணங்களிலும், தெற்கு மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மத்திய மாகாணத்தின் சில இடங்களிலும் இன்று மழையுடனான வானிலை தொடரும் எனத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் இன்று 100 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மழை குறையும் வரை பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

