முதலமைச்சர் பதவிக்காக திமுகவோ, அதிமுகவோ என்னை அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை – திருமாவளவன் அதிரடிப் பேட்டி
Meiveli Media Team

தமிழ்நாட்டில் சமீபத்திய அரசியல் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக மற்றும் அதிமுக தரப்பில் முயற்சி நடந்ததாக வெளியான தகவல்கள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, அத்தகைய முயற்சி நடந்ததாக தனக்கும் தகவல் கிடைத்ததாக கூறியிருந்ததோடு அது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒரு விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.திமுகவோ அல்லது அதிமுகவோ அதிகாரபூர்வமாக தன்னை அணுகவில்லை என்றும், தானும் யாரிடமும் இது தொடர்பாக பேசவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், உறுதிப்படுத்தப்படாத செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியிடப்படுவது வருத்தமளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவது குறித்து பேசப்படுவது வரலாற்று ரீதியாக முக்கியமானது என்றாலும், தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை என்ற கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.இதேவேளை, தனது கருத்துகளைத் திரித்து வெளியிட வேண்டாம் என்றும், தவறான பொருளில் செய்திகள் பரப்பப்படுவது ஊடக நெறிமுறைக்கு எதிரானது என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

