அதிக விலைக்கு பொருட்களை விற்ற பிரபல விடுதி, வர்த்தக நிலையங்களுக்கு அபராதம்
Meiveli Media Team

அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக இரத்தினபுரியில் உள்ள ஒரு பிரபல சுற்றுலா விடுதி மற்றும் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சுற்றிவளைப்பில், அந்த விடுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Bottle குடிநீர் அதன் பொதியில் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், அந்த விடுதிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், குருவிட்ட, பரகடுவ மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் உள்ள மூன்று கடைகள், கீரி சம்பா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், ஒவ்வொரு வர்த்தகருக்கும் ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.அரச அதிகாரிகள், பொருட்களை வாங்கும் முன் அவற்றின் பொதியில் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச விலையை பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.அத்துடன், அதிக விலைக்கு விற்பனை தொடர்பான புகார்களை நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசர இலக்கத்திற்கு தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

