ராகலை டெல்மார் தோட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்: தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகளின் அத்துமீறலால் பதற்றம்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நுவரெலியா மாவட்டம், ராகலை, டெல்மார் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு, தேசிய மக்கள் சக்தியின் வலப்பனை பிரதேச அரசியல்வாதிகளால் கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தோட்டப் பகுதியில் நிலவும் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவருவதற்காக ஊடகவியலாளர்கள் அங்கு சென்றிருந்த வேளையில், “எங்கள் தோட்டப் பிரச்சினையை நாங்களே தீர்ப்போம், வெளியில் இருந்து வேறு எவரும் இங்கு வரக்கூடாது” எனத் தெரிவித்து அந்த அரசியல்வாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தோட்டத்துக்கு வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை மக்கள் சந்திக்கக் கூடாது என கடந்த சில தினங்களாகவே தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் தீவிரப் பிரசாரத்தை முன்னெடுத்து வந்த நிலையில், இன்றைய தினம் காலை முதலே அவர்கள் ஆதரவாளர்களுடன் தோட்டப் பகுதியில் திரண்டிருந்தனர். இதன்போது அங்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் முரண்பட்ட அரசியல்வாதிகள், “மக்கள் பிரச்சினைகளை நாங்கள் ஏற்கனவே தீர்த்துவிட்டோம், அதனை மீண்டும் கிளற வேண்டாம்” எனக் கூறி அவர்களை உடனடியாகத் தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தினர்.

தேசிய மக்கள் சக்தியின் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலரும், அவர்களால் அழைத்து வரப்பட்டவர்களுமே இவ்வாறு ஊடக சுதந்திரத்திற்கும், சமூகச் செயற்பாட்டாளர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் அத்துமீறிச் செயல்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் தமது பணியின் நோக்கம் குறித்து விளக்கிய போதிலும், அங்கு தர்க்கம் ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகள் வெளிவருவதைத் தடுக்கும் நோக்கில் மக்கள் பிரதிநிதிகளே இவ்வாறு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.