திருகோணமலையில் விலைவாசி உயர்வுக்கு எதிராகக் கவனயீர்ப்பு போராட்டம்!

Meiveli Media Team

விலைவாசியைக் குறை! வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்து! என வலியுறுத்தி ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
பெற்றோல், எரிவாயு மற்றும் மின்கட்டணங்களைக் குறைக்க வேண்டும். வறிய மக்களின் பொருளாதாரப் பாதிப்புகளுக்கு ஜனாதிபதி உடனடித் தீர்வை வழங்க வேண்டும்.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்துப் பிரச்சினை குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கொரி இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் இணைந்திருந்தனர்.
வெருகல் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட கிராம மக்கள் எரிபொருள் விலை உயர்வால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, உப்பூறல், சீனன்வெளி, நல்லூர். பாட்டாளிபுரம், சூடைக்குடா, கூனித்தீவு, கடற்கரைச்சேனை.ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், எரிபொருள் விலையேற்றத்தால் தனியார் போக்குவரத்துகளையும் பயன்படுத்த முடியாமல் முடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இதனால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், பாதிக்கப்பட்ட இப்பகுதிகளுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தனர்.