கபில சந்திரசேனவின் பூதவுடலுக்கு மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி; ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவும் சம்மதம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கொழும்பு 8 – பொரள்ளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு, இன்றைய தினம் (10) சென்ற முன்னாள் ஜனாதிபதி, மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தியதுடன், உயிரிழந்த சந்திரசேனவின் குடும்பத்தினரைச் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மலர்ச்சாலை வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷவிடம், இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அண்மையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், சட்ட ரீதியான அழைப்புகளை ஏற்று தாம் நிச்சயமாக ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவித்தார். நாம் அங்கு சென்றுதானே ஆகவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, அவர்கள் குறிப்பிட்டுள்ள தினத்தில் தாம் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் மிகவும் உறுதியாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்திலேயே, முன்னாள் ஜனாதிபதி இந்த முக்கிய அரசியல் அறிவிப்பையும் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

