நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் ஒரு மர்மம்; பாரிய நிதி மோசடி குறித்து முறையான விசாரணை தேவை – நிரோஷன் பாதுக்க

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் முறையான மற்றும் பரந்தளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு படையணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க வலியுறுத்தியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் இன்றைய தினம் (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், 2.5 மில்லியன் டொலர் திருட்டுச் சம்பவம் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த ரங்க நிஷாந்த என்பவர், ஜே.வி.பி (JVP) அமைப்பின் உறுப்பினர் எனவும், அவர் முறையான பதவி உயர்வுகள் இன்றி அரசியல் நியமனம் மூலமே நிதி அமைச்சுக்கு வந்தவர் எனவும் சுட்டிக்காட்டினார்.

அவரது மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில், உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், அநேகமாக அந்தக் காயங்கள் அவராகவே ஏற்படுத்திக்கொண்டவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தனது கையின் நரம்பையும் காலின் நரம்பையும் வெட்டிக்கொண்ட ஒருவர், மற்றுமொரு நரம்பை வெட்டும் அளவுக்கு பலமாக இருப்பாரா என்பது பாரிய சந்தேகத்தை தோற்றுவிப்பதாக தெரிவித்த பாதுக்க, இது ஒரு மர்மமான மரணம் என்பதால் வெறும் மரண விசாரணையோடு இதனை முடித்துவிடக் கூடாது எனத் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் வசம் 75 ஆண்டுகளாக இருந்த அரச கடன் முகாமைத்துவப் பணிகள் 2026 ஜனவரி முதல் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இந்த 2.5 மில்லியன் டொலர் திருட்டு 2025 டிசம்பர் மற்றும் 2026 ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளது.

நிதியமைச்சர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோரின் பொறுப்பின் கீழ் இப்பணிகள் இருந்தபோதே இந்த மோசடி நடந்துள்ளதாகவும், உயிரிழந்த அதிகாரி மேலிடத்து உத்தரவுகளை நிறைவேற்றிய ஒருவராக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைக்கால செயற்பாடுகள் மற்றும் மே தின உரையை கடுமையாக விமர்சித்த நிரோஷன் பாதுக்க, மே 25ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி முன்கூட்டியே அறிவித்தமையானது நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் செயல் எனத் தெரிவித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடப் போவதில்லை என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது முன்னுதாரணமற்ற வகையில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை மக்கள் நிராகரிப்பதாக அவர் கூறினார். துறைமுக கொள்கலன் மோசடி, நிலக்கரி மோசடி மற்றும் நிதி அமைச்சின் திருட்டுச் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மௌனம் காப்பதாகவும், இவ்வாறான ஊழல்கள் நிறைந்த ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளால் எவ்வாறு பணியாற்ற முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதியின் மே தின உரையில் சர்வாதிகாரப் போக்கு மற்றும் அடக்குமுறை வெளிப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டு மக்கள் தற்போது இந்த ஆட்சியின் உண்மைத் தன்மையை உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.