விமர்சனங்களை மறைப்பதற்கு முயற்சிக்கும் அர்ச்சுனா MP – அதன் வெளிப்பாடே எம்மீதான பொய்ப் பரப்புரை – ஈ.பி.டி.பி!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தனக்கு எதிரான விமர்சனங்களையும் குற்றங்களையும் மறைப்பதற்கும், தன்னை புனிதராக்குவதற்குமே அர்ச்சுனா MP முயற்சிக்கின்றார்.
அதன் ஒரு வெளிப்பாடே எம்மீதான குற்றச்சாட்டும் இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடன் காணி முரண்பாட்டில் ஈடுபடுகின்றவர்களுக்கும் ஈ.பி.டி.பி. க்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று ஈ.பி.டி பி. தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக மையத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஈ. பி டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் மானிப்பாய் பிரதேச அமைப்பாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் ஆகியோர் மேலும் தெரிவிக்கையில் –
” தமக்கு எதிரான விமர்சனங்களை மறைப்பதற்கும், தங்களை புனிதர்களாக்குவதற்கும், தியாகிகளாக்குவதற்கும் யாரெல்லாம் விரும்புகின்றார்களோ, அவ்வாறானவர்கள் கையில் எடுக்கின்ற இலகு வழிமுறைதான், ஈ.பி.டி.பி. க்கு எதிரான விமர்சனங்கள். இதுவே நீண்ட வரலாறாக இருக்கின்றது.
அந்த அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களும், 2023 ஆம் ஆண்டு எமது செயலாளர் நாயகத்துடனான உரையாடலின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தார்.
உண்மையிலேயே குறித்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம், பிரதேச அமைப்பாளர் ஊடாக விசாரித்து எமது கட்சி உறுப்பினர்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதுடன், சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தனக்கு எதிரான விமர்சனங்களை மறைப்பதற்கு பழைய உரையாடலை வெளிப்படுத்தி தவறான கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
எவ்வாறாயினும், இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்கள், ஈ.பி.டி.பி. அதிகாரத்தில் இருந்த காலங்களில்கூட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை., ஆயுதங்களை அப்பாவிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தியது இல்லை என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

