பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு மகா நாயக்க தேரர்களின் அனுமதியைப் மீண்டும் நடைமுறைப்படுத்த மகா நாயக்க தேரர்கள் கோரிக்கை
Meiveli Media Team

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பிக்குகள் குழுவினர், மகா நாயக்க தேரர்களின் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமின்றி தாய்லாந்திற்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு மகா நாயக்க தேரர்களின் எழுத்து மூல அனுமதி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த நடைமுறையை அரசாங்கம் அண்மையில் நீக்கியிருந்தது. இந்தச் சட்டத் தளர்வே இவ்வாறான பாரிய முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு வழிவகுத்துள்ளதாக பௌத்த மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் காமினி சேனாரத்ன, ‘பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு மகா நாயக்க தேரர்களின் அனுமதியைப் பெறும் நடைமுறை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குறித்த கட்டுப்பாட்டு முறையை மீண்டும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு மகா நாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையைத் தாம் வெளிவிவகார அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இந்த கடத்தல் குழுவை வழிநடத்தியதாகக் கருதப்படும் பிரதான பிக்கு கம்பஹா, மீகஹமுல்ல பகுதியில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அவர் விசாரணைகளுக்கு உரிய முறையில் ஒத்துழைக்க மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

