வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் துப்பாக்கிச் சூடு: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் சந்தேக நபர்  கோல் தாமஸ் ஆலன்

Meiveli Media Team

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் இரவு விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சந்தேக நபர், கலிபோர்னியா மாநிலத்தின் டொரன்ஸ்  பகுதியைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ட்ரம்ப்  நிர்வாக உறுப்பினர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென அமெரிக்க அட்டர்னி ஜெனரல்  டாட் பிளான்ச்  கூறியுள்ளார்.  சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள், ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டார்.

சந்தேக நபர் தற்போது வடமேற்கு வாஷிங்டன் டி.சி. யில் உள்ள
பெருநகர காவல் துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பின்னர் தலைநகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தடுப்புக்காவல் மையத்திற்கு மாற்றப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டாட்சி அதிகாரியைத் தாக்கியது மற்றும் வன்முறை குற்றத்தின் போது துப்பாக்கியைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இன்று முறையாக பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் கூட்டாட்சி குற்றச்சாட்டுகளும் பின்னர் தாக்கல் செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.