மத்தள சர்வதேச விமான நிலையத்தில் வனஜீவராசிகள் அலுவலகம் திறப்பு: விமானச் சேவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சூழவுள்ள உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட சூழலில் ஏற்படும் வனஜீவராசிகள் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்தவும், விமான நிலையச் சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விமான நிலைய வளாகத்தினுள் புதிய வனஜீவராசிகள் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக அவர்களின் தலைமையில் மத்தள விமான நிலைய வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் (இலங்கை) நிறுவனம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் விமான நிலையங்கள் நிறுவனத்தின் பதில் தலைவர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த அலுவலகத்தை நிறுவுவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சர் மருத்துவர் தம்மிக படபெந்தி மற்றும் அந்த அமைச்சின் முழுமையான அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அனுர கருணாதிலக, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) விதிமுறைகளுக்கு இணங்க, மத்தள விமான நிலையத்தின் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை முறையாக நிர்வகிப்பது சர்வதேச ரீதியில் மிக முக்கியமானது எனத் தெரிவித்தார். மேலும், விமான நிலைய வளங்களைப் பயன்படுத்துவதற்கும், அதன் உள்நாட்டு மற்றும் தரைவழிச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி கருதி வெளிப்படைத்தன்மையுடன் சிறந்த முதலீட்டு நிறுவனத்தைத் தெரிவு செய்யும் பணிகள் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலாப்பத்தி, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன, பணிப்பாளர் நாயகம் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல மற்றும் சுங்க, குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.