நீலகாமம் தோட்டத்திற்கு பிரதியமைச்சர் பிரதீப் விஜயம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வந்த பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இன்றைய தினம் நீலகாமம் தோட்டத்திற்கு விஜயம் செய்ததுடன் தற்காலிக வீடு அமைக்கப்பட்டிருந்த இடத்தினையும் சென்று பார்வையிட்டு தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களையும் சந்தித்து தகவல்களைக் கேட்டறிந்தார்.

காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் தற்காலிக வீடொன்றை நிர்மாணித்த தோட்ட இளைஞர்கள் மீது குண்டர்கள் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திருந்தது. இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்காக தேவையான நடவடிக்கைகளை பிரதியமைச்சர் பிரதீப் எடுத்திருந்த நிலையில் இன்று இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ மற்றும் பெல்மடுல்ல பிரதேச சபை உறுப்பினர்களுடன் அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

அவருடைய வருகைக்காகக் காத்திருந்த மக்கள், அவர்களுடைய பல்வேறு பிரச்சினைகளையும் நடந்த சம்பவம் பற்றியும் தெளிவுபடுத்தியதுடன் இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை பிரதியமைச்சருக்கு முன்வைத்தனர்.
பிரச்சினை தொடர்பாக ஆரம்பம் முதல் தமது கவனத்தை செலுத்தியதற்காக பாதிக்கப்பட்டவர்களும் ஊர் மக்களும் பிரதியமைச்சருக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை தொடர்பாக பிரதி அமைச்சருக்கு மனு ஒன்றினையும் கையளித்தனர்.

அது தொடர்பில் தனது கவனத்தை செலுத்துவதாக குறிப்பிட்ட பிரதியமைச்சர் பிரதீப், குறிப்பிட்ட பிரச்சினைக்கு முகம் கொடுத்த பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் சரியான நியாயத்தினை வெகு விரைவில் பெற்றுத் தருவதற்கும் தோட்டங்களில் காணப்படும் குண்டர் படைகளின் செயற்பாட்டினை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


