தீயின் புதிய தனிப்பாடல் “வாரி வாரி” வெளியீடு: கொழும்பில் நட்சத்திரங்கள் சங்கமித்த பிரம்மாண்ட நிகழ்வு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகியும் கலைஞருமான தீ (Dhee) அவர்களின் புதிய தனிப்பாடலான “வாரி வாரி” (Vary Vary) வெளியீட்டு விழா, இன்று (24) கொழும்பில் உள்ள சினமன் லைப் (Cinnamon Life) நட்சத்திர விடுதியில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களின் கலைத்துவப் பாலமாக அமைந்த இந்நிகழ்வில், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இப்பாடல் வெளியீட்டு விழாவில் கௌரவ விருந்தினர்களாக இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் இலங்கையின் பல்துறை சார்ந்த கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பாடகி தீயின் இந்த புதிய படைப்பை வாழ்த்திச் சிறப்பித்தனர்.
“என்ஜாய் எஞ்சாமி” போன்ற உலகளாவிய ரீதியில் வரவேற்பைப் பெற்ற படைப்புகளைத் தொடர்ந்து, தீயின் தனித்துவமான குரலிலும் பாணியிலும் வெளியாகியுள்ள இந்த “வாரி வாரி” பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மற்றும் இலங்கை கலைஞர்களுக்கிடையிலான கலாசார உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்த இந்த வெளியீட்டு விழா, கொழும்பின் கலை வட்டாரத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.


