களுத்துறை அருகே ‘சாகரிகா’ புகையிரதம் தடம் புரண்டது: கரையோரப் பாதையின் போக்குவரத்து முற்றாகப் பாதிப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ‘சாகரிகா’ அதிவேகப் புகையிரதம், வடக்கு களுத்துறை மற்றும் வாத்துவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து காரணமாக கரையோரப் புகையிரதப் பாதையின் இருவழிப் போக்குவரத்துகளும் தற்போது முற்றாகத் தடைப்பட்டுள்ளதுடன், புகையிரதப் பாதைக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, கொழும்பு மருதானையிலிருந்து புறப்படும் புகையிரதங்கள் வாத்துவ வரை மாத்திரமே இயக்கப்படுவதுடன், பெலியத்தை, மாத்தறை மற்றும் காலியிலிருந்து வருகை தரும் புகையிரதங்கள் தெற்கு களுத்துறை புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தண்டவாளத்தைச் சீர்செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இப்பாதையிலான போக்குவரத்து வழமைக்குத் திரும்ப மேலதிக நேரம் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.