ஏஐ தொழில்நுட்ப8,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவிப்பு
Meiveli Media Team

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டங்களுக்கு அதிகளவு முதலீடு செய்யவுள்ளதால் அடுத்த மாதம் தனது ஊழியர்களில் சுமார் 8,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை தவிர வெற்றிடமாக உள்ள ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் நிரப்பப்போவதில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மாத்திரம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக 135 பில்லியன் டொலர்களை மெட்டா செலவிடத் திட்டமிட்டுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் செலவிடப்பட்ட மொத்தத் தொகைக்குச் சமமானதாகும். செயற்கை கருவிகளைப் பயன்படுத்தும் ஊழியர்கள் அதிக உற்பத்தித்திறனுடன் செயல்படுகின்றனர். ஒரு பெரிய குழு செய்ய வேண்டிய வேலையை தற்போது ஒருவரே செய்து முடிக்கிறார்’ என மெட்டா தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டானது வேலை செய்யும் முறையை செயற்கை நுண்ணறிவு முற்றிலும் மாற்றியமைக்கும் ஆண்டாக இருக்கும் என அவர் முன்னரே கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஊழியர்கள் தங்களது கணினிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை மெட்டா கண்காணிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தக் கண்காணிப்புத் தரவுகளை வைத்துத் தனது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை மேம்படுத்த மெட்டா திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ‘மிகவும் கொடூரமானது’ என ஊழியர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். மெட்டா மாத்திரமன்றி, பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த ஆண்டு பாரிய பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன: அமேசான் நிறுவனம் 30,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஒராக்கிள் நிறுவனம் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனம் சிரேஷ்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அறிவித்துள்ளது. பிளாக் நிறுவனம் தனது ஊழியர்களில் 4,000 பேரை நீக்கியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்வதையே இதற்குக் காரணமாகத் தெரிவித்துள்ளன.

