ரஷ்யா – இலங்கை இடையிலான இளைஞர் மற்றும் விளையாட்டு உறவுகள் புதுப்பிப்பு: ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்க அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவன் எஸ். ஜகார்யன் (H.E. Levan S. Dzhagaryan) அவர்களுக்கும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று அமைச்சக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் கௌரவ தினுது சமன் ஹென்னாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.
இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையினூடாக மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, இரு நாட்டு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இடையே அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான விசேட பரிமாற்றத் திட்டங்களைச் செயற்படுத்துவது குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் முக்கிய நிகழ்வாக, ரஷ்யாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளுமாறு ரஷ்ய தூதுவர் அவர்கள் அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார். அத்துடன், ரஷ்யாவிடம் உள்ள நவீன விளையாட்டு தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பயிற்சி முறைகளை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வது குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையில் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் திரு. அருண பண்டார மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், ரஷ்ய தூதரகத்தின் சார்பில் இரண்டாம் செயலாளர் திருமதி கலினா குக்லினா (Ms. Galina Kuklina) அவர்களும் பங்கேற்றார். இந்தச் சந்திப்பானது இலங்கை இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியிலான புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும் ஒரு தீர்மானமிக்க மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


