தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம்  ஓய்ந்தது: நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு  ஆரம்பம்

Meiveli Media Team

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 300 கம்பெனி துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்குப் பதிவு நாளை நடைபெறும் நிலையில்இ நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை நந்தனத்தில் தவெக தலைவர் விஜய், ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி, சென்னை எழும்பூரில் சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், காரைக்குடியில் நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் ஜி.கே.வாசன் ஆகியோர் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அந்த நேரத்தில் இருந்து நாளை வாக்குப்பதிவு நிறைவடையும் மாலை 6 மணி வரையிலான 48 மணி நேரத்தை அமைதி காலமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த அமைதி காலத்தில் தேர்தல் தொடர்பான எந்தப் பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ நடத்த கூடாது. எந்தத் தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்எம் ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. தமிழகம் முழுதும் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் நேற்று மாலை முதலே போலீஸார் தீவிர சோதனை நடத்தி, தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வாக்காளர் அட்டை இல்லாவிட்டால் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப் பதிவு நிறைவடைந்த பின், அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களும், பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல் ஏப்.29-ம் தேதி நடைபெறுகிறது. அதன்பின், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.