​”ஈஸ்டர் தாக்குதலுக்கு நிபந்தனையற்ற நீதி கோருகிறோம்; தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அரசு ஏமாற்றக்கூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்”

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அந்தத் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலால் ஆயிரக்கணக்கான மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்குத் தமது கட்சி என்றும் தனது ஆதரவைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இக்குற்றத்தைச் செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட உரிய தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க எடுக்கப்படும் சகல முயற்சிகளுக்கும் தமது கட்சி எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அவர் உறுதியளித்தார்.

இச்சம்பவத்தின் பின்னால் உள்ள உண்மை கண்டறியப்படாமல் இருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தோல்வியாகும் என்றும், அரசாங்கம் இதனைச் செய்யத் தவறினாலும், இது குறித்து உண்மையான அக்கறையுடன் செயற்படும் ஏனைய தரப்புகளுக்குத் தாம் ஆதரவு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் குறித்து அதிருப்தி வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அவர்கள் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறியவர் என்பதால் சகல விடயங்களையும் அவர் நன்கு அறிவார் என்றும், செய்ய முடிந்த காரியங்களைச் செய்ய வேண்டும் அல்லது முடியாதவற்றை முடியாது என்று வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளின் போதும் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளோம். தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கோரும்போது நாடு பிரிக்கப்படப் போகிறது என்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியில் நிலவுகிறது. இருப்பினும், நாட்டைப் பிரிக்காமல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக நாம் முன்வைக்கும் சமஷ்டி கோரிக்கையை ஒருபோதும் கைவிடத் தயாரில்லை.

அண்மையில் இலங்கைத் தமிழரசு கட்சி உள்ளிட்ட மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து சந்தித்த போதும், நாட்டைப் பிரிக்காமல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டையே வலியுறுத்தினோம்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அச்சப்படுவதாகத் தெரிவித்த அவர், ஒற்றையாட்சி முறைமையின் கீழ் எவ்வித அதிகாரத்தையும் பகிர்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்பதை ஆளுநர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் உறுதிப்படுத்துவதாகவும், மாகாண சபைத் தேர்தல் முறைமையின் ஊடாகத் தமிழ் மக்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் தனது ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.