இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தனது பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியத் துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (20) பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மீண்டும் இந்தியா புறப்பட்டுச் சென்றார்.

இந்தியத் துணை ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை வழிஅனுப்பி வைப்பதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததுடன், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.
கடந்த 19ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த இந்தியத் துணை ஜனாதிபதி, தனது விஜயத்தின் முதல் நாளில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள இந்திய சமூகத்தினரைச் சந்தித்த அவர், பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் மற்றும் ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரை ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.


தனது விஜயத்தின் இரண்டாம் நாளான இன்று, நுவரெலியா பகுதிக்கு விஜயம் செய்த இந்தியத் துணை ஜனாதிபதி, இந்திய நிதியுதவியின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்களை நேரில் பார்வையிட்டதுடன், மலையக சமூகத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

நுவரெலியா சீதா அம்மன் கோவிலில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டதனைத் தொடர்ந்து, அவர் தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து புறப்பட்டார்.