ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம்! – பெரிய திட்டத்துடன் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்றைய தினம் (20) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, பொதுமக்களிடையே புத்தாண்டு தொடர்பான உற்சாகமோ அல்லது உண்மையான புத்தாண்டு உணர்வோ காணப்படவில்லை என்றார்.

மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இம்முறை புத்தாண்டை எதிர் கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இம்முறை மே தினம் பௌத்தர்களின் புனித நாளான வைகாசி பெளர்ணமி (வெசக் போயா) தினத்தில் வருவதால், அரசியல் ரீதியிலான மே தின ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்தப் போவதில்லை என அவர் உறுதிப்படுத்தினார். மே தினத்திற்குப் பதிலாக அன்றைய தினம் சமய வழிபாடுகள் மற்றும் ‘பிங்கம் எனப்படும் பௌத்த புண்ணிய காரியங்கள்’ உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இணைந்து மே தினத்தைக் கொண்டாடப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து வினவியபோது, தமது கட்சி அவர்களுடன் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும், அன்றைய தினம் தாம் ‘சில் எனப்படும் உபவாசம்’ உள்ளிட்ட சமயக் கிரியைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிய ஆண்டில் அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவித்தார். அத்துடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டத்தை தமது கட்சி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரவிருக்கும் அரசியல் சவால்கள் மற்றும் மாற்றங்களுக்குத் தமது கட்சி முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.