இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இணைந்த திருகோணமலை எண்ணெய் சேமிப்பு முனையத் திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும் :இந்தியத் துணைத் குடியரசுத் தலைவர் தெரிவிப்பு
Meiveli Media Team

இந்தியத் துணைத் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் இலங்கை விஜயத்தின் போது, திருகோணமலை எண்ணெய் சேமிப்பு முனையத் திட்டம் மற்றும் இந்தியா – இலங்கை இடையிலான எண்ணெய் குழாய் கட்டமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மிஸ்ரி, இலங்கையின் வடகிழக்கு துறைமுகமான திருகோணமலையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த எண்ணெய் மையம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனான சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். ஐக்கிய அரபு இராச்சியத்தையும் உள்ளடக்கிய இந்தத் திட்டம் குறித்து 2023 ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், இது ஒரு பாரிய நிதி முதலீட்டைக் கொண்ட மூலோபாய ரீதியான முன்முயற்சி என அவர் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரித்தார். இவ்வாறான மூலோபாயத் திட்டங்களில் முன்னேற்றம் காண்பதற்கு இனிமேலும் காலத்தை வீணடிக்க முடியாது’ என்று கூறிய மிஸ்ரி, இத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இந்த எரிசக்தி மையம் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டிருந்தால், ‘இதைப் போன்றதொரு காலக்கட்டத்தில்’ அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டினார். இரண்டு ஆண்டுகாலப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரு தெற்காசிய நாடுகளையும் இணைக்கும் பல்திறன் எண்ணெய் குழாய் கட்டமைப்பை நிறுவுவதற்கும் திருகோணமலை எண்ணெய் சேமிப்பு வளாகத்தை அமைப்பதற்கும் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் ஒரு வருடத்திற்கு முன்னர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

