சித்திரை புத்தாண்டு பருவகாலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) வரலாற்று சாதனை: 6 நாட்களில் 1 பில்லியன் ரூபாய் வருமானம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கடந்த சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை முன்னெடுத்த விசேட போக்குவரத்து சேவையானது பாரிய வெற்றியை ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விசேட திட்டத்தின் கீழ் கடந்த 6 நாட்களில் மாத்திரம் இலங்கை போக்குவரத்துச் சபை 1 பில்லியன் (100 கோடி) ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தைப் பெற்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
குறிப்பாக, ஏப்ரல் 8 ஆம் திகதி 163 மில்லியன் ரூபாயும், 9 ஆம் திகதி 173 மில்லியன் ரூபாயும், 10 ஆம் திகதி 193 மில்லியன் ரூபாயும் வருமானமாக ஈட்டப்பட்டது. மிக முக்கியமாக, ஏப்ரல் 11 ஆம் திகதி சபை வரலாற்றில் இதுவரையில்லாத வகையில் ஒரு நாளில் 213 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டதோடு, அன்று மாத்திரம் 20 இலட்சம் பயணிகள் போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சாதாரணமாக ஒரு நாளைக்கு 10 இலட்சம் பயணிகள் பயணிக்கும் நிலையில், இம்முறை பயணிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இந்த விசேட சேவை இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக ஏப்ரல் 9 முதல் 13 ஆம் திகதி வரை கொழும்பிலிருந்து வெளிப்பிரதேசங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வெளிப்பிரதேசங்களிலிருந்து மீண்டும் கொழும்பு நோக்கி வரும் மக்களுக்காக விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதுள்ள வளங்களைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்ததாலும், ஊழியர்கள் 24 மணிநேரமும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாலுமே இந்த மைல்கல்லை எட்ட முடிந்ததாகத் தலைவர் மேலும் பாராட்டு தெரிவித்தார்.

